பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிரித்தானிய பிரதமர் மறுப்பு... அவர் கூறும் காரணம்
காஸாவில் மனிதாபிமானப் பேரழிவு மோசமடைந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்குமாறு கெய்ர் ஸ்டார்மர் மீது பிரித்தானியாவின் மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்தனர்.
இரு-மாநில தீர்வு
அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஒன்பது கட்சிகளைச் சேர்ந்த 221 உறுப்பினர்கள் பிரதமர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஆனால் அந்த கோரிக்கையை பிரதமர் ஸ்டார்மர் நிராகரித்துள்ளார். அங்கீகாரம் என்பது ஒரு விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், அதுவே இறுதியில் இரு-மாநில தீர்வு மற்றும் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு நீடித்த பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் நிலை பரிதாபமாக மாறி வருவதாகவும், அவர்களுக்கான சிறப்பு உணவின் இருப்பு ஆகஸ்டு மாத மத்தியில் தீர்ந்துவிடும் என்றும் ஐ.நா மன்றத்தின் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே பிரித்தானியாவின் நாடளுமன்ற உறுப்பினர்களின் கடிதம் வெளியாகியுள்ளது.
இதனிடையே, காஸாவிற்கான உதவிகள் அனைத்தையும் இஸ்ரேல் இராணுவம் முடக்குவதாக பாலஸ்தீன மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் ஹமாஸ் படைகள் காரணமாகவே உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு கிடைப்பதில்லை என இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
ஹமாஸ் படைகள் தடையாக
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் படைகள் தடையாக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் கத்தாரில் இருந்து இந்த விவகாரம் தொடர்பில் தங்கள் பிரதிநிதிகள் குழுவையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் திரும்ப பெற்றுள்ளது.
மேலும், பணயக்கைதிகள் அனைவரையும் விடுவித்ததன் பின்னர் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும் என சூசகமாக குறிப்பிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், அதனாலையே, ஹமாஸ் படைகள் ஒப்பந்தத்திற்கு மறுப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பிரான்சின் தவறான முடிவை பின்பற்ற வேண்டாம் என்றும், ஹமாஸ் படைகளுக்கே அது சாதகமாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான Kemi Badenoch பிரதமர் ஸ்டார்மரை எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக வியாழக்கிழமை பிரான்ஸ் அறிவித்தது. இப்படியான முடிவெடுக்கும் முதல் G7 நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |