உங்கள் கோபத்தை தேர்தலில் காட்டவேண்டாம்: மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
பிரித்தானியா முழுவதும் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் பல நடைபெற உள்ள நிலையில், கோப அரசியல் வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள்
இங்கிலாந்தில் இன்று ஆயிரக்கணக்கான கவுன்சிலர்கள் மற்றும் மேயர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

ஸ்கொட்லாந்திலும், வேல்ஸ் நாட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.
மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
பிரித்தானியாவைப் பொருத்தவரை, பொதுவாக கன்சர்வேட்டிவ் கட்சி, லேபர் கட்சி என்னும் இரு பெரும் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கும்.
ஆனால், தற்போது, கன்சர்வேட்டிவ் கட்சியை பின்னுக்குத் தள்ளி, நைஜல் ஃபராஜின் ரீஃபார்ம் யூகே, ஸாக் போலன்ஸ்கியின் கிரீன்ஸ் கட்சி ஆகியவை மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துவருகின்றன.
ஆளும் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி புலம்பெயர்தலை சரியாக கட்டுப்படுத்தவில்லை என்பது முதல் பல்வேறு கோபங்கள் மக்களுக்கு அக்கட்சி மீது உள்ளன.

அதை ரீஃபார்ம் யூகே போன்ற கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவோம் என்பது போன்ற வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவருகின்றன.
இந்நிலையில், கோப அரசியல் வேண்டாம், அதாவது மக்கள் தங்கள் கோபத்தை தேர்தலில் காட்டவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
முந்தைய ஆட்சியாளர்கள் உருவாக்கிவைத்துவிட்டுச் சென்ற நிதிப்பிரச்சினைகள், கோவிட், லிஸ் ட்ரஸ்ஸின் மினி பட்ஜெட்டால் உருவான பிரச்சினைகள், இவற்றுடன் ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தாக்கம் ஆகிய பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் பிரித்தானியா உள்ளது என்று கூறியுள்ள பிரதமர் ஸ்டார்மர், இன்று வாக்களிக்கும்போது கோபப்பட்டு முடிவெடுப்பதற்கு பதிலாக, சிறந்த எதிர்காலத்தை நோக்கிய முன்னேற்றத்தைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதாவது, அரசு இதுவரை என்ன செய்தது, இனி என்ன செய்யப்போகிறது என்பதை நினைவில் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ள பிரதமர் ஸ்டார்மர், கன்சர்வேட்டிவ் கட்சியின் கெமி பேடனாக்கும், ரீஃபார்ம் யூகேயின் நைஜல் ஃபராஜும் மத்திய கிழக்கு போரில் ட்ரம்புக்கு ஆதரவளிக்க ஓடியதையும், கிரீன் கட்சியின் ஸாக் போலன்ஸ்கி நேட்டோவிலிருந்து வெளியேற வற்புறுத்துவதையும் பொலிசாரையே விமர்சிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களால் இன்று நாட்டில் நிலவும் பிரச்சினைகளை எதிர்கொள்ளமுடியாது என்று கூறியுள்ள ஸ்டார்மர், பிரிவினைக்கு பதிலாக ஒற்றுமையைத் தேர்ந்தெடுங்கள் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்றைய தேர்தல்கள், அடுத்துவரும் பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைய உள்ளது மட்டுமின்றி, சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்புகளை சந்தித்துவரும் பிரதமர் ஸ்டார்மரின் எதிர்காலத்தையும் முடிவு செய்யக்கூடியதாக உள்ளன என்பதையும் யாரும் மறுக்கமுடியாது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |