கொழும்பு போராட்டத்தில் வெடித்த வன்முறை.. மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு!
இலங்கையின் கொழும்பில் நிகழ்ந்த வன்முறை தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களில் வன்முறை வெடித்தது.
குறிப்பாக, அந்த போராட்டங்களில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த 9ம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
Photo Credit: PTI
அன்றைய தினம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொழும்பு-க்கு வந்த அவரது ஆதரவாளர்கள், போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
Photo Credit: Ishara S. Kodikara/Agence France-Presse/Getty Images
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர், இந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரித்த பொலிஸார், வன்முறையில் ஈடுபட்டதாக 2 எம்.பிக்கள் உள்பட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் பலரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர் தங்கி இருக்கும் இடத்திற்குச் சென்று குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit: PTI