கிரிக்கெட் கடவுளின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், டான் பிராட்மேனின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.
30வது டெஸ்ட் சதம்
சிட்னியில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ஓட்டங்கள் குவித்துள்ளது.
உஸ்மான் கவாஜா 195 ஓட்டங்களுடனும், மேட் ரென்ஷா 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் அரங்கில் தனது 30வது சதத்தை பதிவு செய்தார்.
இதன்மூலம் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் டான் பிராட்மேனின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். பிராட்மேன் 29 டெஸ்ட் சதங்கள் அடித்திருந்த நிலையில் ஸ்மித் 30 சதங்கள் அடித்து, அதிக சதங்கள் விளாசிய மூன்றாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஹேடனின் சாதனை முறியடிப்பு
ஏற்கனவே மேத்யூ ஹேடன் (30) மூன்றாவது இடத்தில் உள்ளார். எனினும் அவரை விட குறைந்த இன்னிங்ஸ்களில் (162) ஸ்மித் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
மேலும் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஹேடனை (8625 ஓட்டங்கள்) பின்னுக்கு தள்ளியுள்ளார் ஸ்மித் (8647 ஓட்டங்கள்).
இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ரிக்கி பாண்டிங் (13,378 ஓட்டங்கள்) மற்றும் ஸ்டீவ் வாக் (10,927 ஓட்டங்கள்) உள்ளனர்.
@Getty