அச்சுறுத்தும் புதிய கொரோனா மாறுபாடு: கடும் வீழ்ச்சியில் பங்குச் சந்தைகள்
தென்னாப்ரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள வீரியம் மிகுந்த கொரோனா மாறுபாடு அச்சம் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
வீரியம் மிகுந்த புதிய பொஸ்வானா தொற்றால் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் அமுலாகலாம் என்றே முதலீட்டாளர்கள் அச்சப்படுவதாக தெரிய வந்துள்ளது.
வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே சீன, ஜப்பான் மற்றும் இந்திய பங்குகள் சரிந்தன. ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.56% சரிவடைந்தது, டோக்கியோவில் நிக்கி 225 2.5% சரிந்தது, அதே வேளை ஹொங்ஹொங்கில் ஹாங் செங் 2.67% சரிந்தது.
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி50 இரண்டும் 2%க்கு மேல் சரிவடைந்தது. நியூசிலாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய சந்தைகளும் சரிவை சந்தித்தன.
மட்டுமின்றி குறித்த பொஸ்வானா தொற்று தொடர்பான செய்திக்கு பின்னர் முக்கிய ஐரோப்பிய குறியீடுகளும் சரிவடைந்தன. ஐரோப்பாவின் Euronext 100 மற்றும் லண்டனின் FTSE 100 ஆகியவை 3% சரிவை சந்தித்தன.
ஜேர்மனியின் DAX 2.9% சரிவை எதிர்கொண்ட நிலையில் பிரன்சின் CAC 3.6% சரிவடைந்தன. இந்த புதிய மாறுபாடு எஞ்சிய நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், மீண்டும் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை பரவலாகப் பயன்படுத்தியுள்ளன.
இதனிடையே, இங்கிலாந்து உட்பட 33 நாடுகளுக்கான பயணத் தடையை அமெரிக்கா இந்த மாத தொடக்கத்தில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.