டெஸ்டில் 17 சிக்ஸர்.. 64 பந்தில் சதம்.. மிரட்டல் சாதனை படைத்த வீரர்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் 17 சிக்ஸர் விளாசி, கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.
வொர்செஸ்டரில் நடந்து வரும் லீக் போட்டியில் துர்ஹாம்-வொர்செஸ்டர்ஷைர் அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற துர்ஹாம் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.
சீன் டிக்சன் 104 ஓட்டங்களும், போர்த்விக் 89 ஓட்டங்களும், பீட்டர்சன் 50 ஓட்டங்களும் எடுத்தனர். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் மிரட்டினார்.
டெஸ்ட் போட்டியை அவர் டி20 போட்டியை போல விளையாடினார். பவுண்டரிகளை விட சிக்ஸர்களை அவர் அதிகமாக பறக்கவிட்டார். 64 பந்துகளில் சதம் விளாசி, முதல் தர போட்டியில் அதிவேக சதம் அடித்த துர்ஹாம் அணி வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதன் பின்னரும் அதிரடியில் வெளுத்து வாங்கிய ஸ்டோக்ஸ், 88 பந்துகளில் 161 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள், 17 சிக்ஸர் அடங்கும். இந்தப் போட்டியில் 17 சிக்ஸர் விளாசியதன் மூலம், கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் குளோசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய சைமண்ட்ஸ், எசக்ஸ் அணிக்காக விளையாடிய கிரஹாம் நேப்பியர் ஆகியோர் தலா 16 சிக்ஸர் அடித்ததே சாதனையாக இருந்தது.
ஸ்டோக்ஸ் (161), பெடிங்காம் (135) ஆகியோரின் உதவியுடன் துர்ஹாம் அணி 580 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய வொர்செஸ்டர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.