ஹெலிகொப்டர் பயணம்... இளவரசர் வில்லியம் குடும்பத்தை எச்சரித்த ராணியார்
ஹெலிகொப்டர் பயணம் தொடர்பில், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது குடும்பத்தினரை ராணியார் பலமுறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகொப்டர் பயணம் ஆபத்தில் முடிய வாய்ப்பிருப்பதாக கூறியே ராணியார் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது குடும்பத்தினரை கடிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் இளவரசர் வில்லியத்துடன் ராணியார் பலமுறை பேசியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காலநிலை சாதகமாக இல்லாத வேளையில் கட்டாயம் ஹெலிகொப்டர் பயணம் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
பொதுவாக, மூத்த அரச குடும்பத்து உறுப்பினர் எவரும் ஒன்றாக பயணம் செய்வதை எழுதப்படாத விதிகள் அனுமதிப்பதில்லை. ஆனால் இளவரசர் வில்லியத்திற்கு குழந்தைகள் பிறந்த பின்னர், அந்த விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மட்டுமின்றி வில்லியம் குடும்பம் லண்டன் மற்றும் நார்ஃபோக் பகுதியில் வசித்து வருவதால், இரண்டு வீடுகளுக்கும் இடையே சுமார் 115 மைல் தொலைவு அடிக்கடி பயணம் செய்யும் நிலையும் உருவாகியுள்ளது.
மேலும், வில்லியம் குடும்பம் பயணம் செய்யும் நாட்களில் இரவு நேரம் ராணியார் கண் விழித்து காத்திருப்பதும் வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதனாலையே, ராணியார் தமது நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரண்மனை அதிகாரிகள் தரப்பிடம் இது தொடர்பில் விவாதித்துள்ளார்.
வில்லியம் திறமையான விமானி என ராணியாருக்கு தெரியும், இருப்பினும் ஆபத்தை தவிர்ப்பதே புத்திசாலித்தனம் என கருதுகிறார் ராணியார். பொதுவாக விமானி மற்றும் குழுவினருடனே இளவரசர் வில்லியம் குடும்பம் ஹெலிகொப்டர் பயணம் மேற்கொள்ளும்.
ஆனால் சில நேரங்களில் இளவரசர் வில்லியம் தாமே விமானியாக செயல்படுவதும் உண்டு. அதுவும் 2013ல் இளவரசர் ஜோர்ஜ் பிறந்ததற்கு பின்னர் இது அடிக்கடி நடந்து வருகிறது.