விளையாட்டு வேண்டாம்... புடினுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரதமர் ஸ்டார்மர்
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் இன்னும் போக்கு காட்ட வேண்டாம் என ரஷ்ய ஜனாதிபதிக்கு பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
25 நாடுகளின் கூட்டணி
உக்ரைன் போர் நிறுத்தம் ஏற்பட்டால், அதன் பின்னர் முன்னெடுக்க வேண்டிய அமைதி காக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த ஸ்டார்மர் திட்டமிட்டு வருகிறார்.
உக்ரைனில் அமைதி திரும்பும் பொருட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க 25 நாடுகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ள பிரதமர் ஸ்டார்மர், சனிக்கிழமை சந்திப்பு ஒன்றையும் நடத்தவிருக்கிறார்.
மட்டுமின்றி, ரஷ்யா பொருளாதாரத்தின் மீது நட்பு நாடுகள் அழுத்தமளித்து, உக்ரைனில் நீண்டகால அமைதியை ஆதரிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று ஸ்டார்மர் கோரிக்கை முன்வைக்க உள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய ஆணையம், நேட்டோ, கனடா, உக்ரைன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் காணொளி ஊடாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மட்டுமின்றி, இந்த சந்திப்பின் போது, அடுத்த வாரம் நடைபெறும் இராணுவ திட்டமிடல் அமர்வுக்கு முன்னதாக, ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதைத் தடுக்க அவர்கள் வழங்கக்கூடிய உதவி குறித்த புதிய தரவுகளும் வெளியிடப்படும்.
இதனிடையே, இந்த வாரம் அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் 30 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை ஏற்படுத்தின, டொனால்ட் ட்ரம்ப் இந்த திட்டங்களைப் பற்றி விவாதிக்க ரஷ்யாவிற்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்பினார்.
பொருளாதார அழுத்தம்
ஆனால், அவர் புடினை நேரிடையாக சந்திக்க 8 மணி நேரம் காத்திருந்ததாகவே தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், உக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ஒப்பந்தத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் விளையாட்டு காட்டுவதை அனுமதிக்க முடியாது என்றார்.
ட்ரம்பின் போர் நிறுத்த முன்மொழிவை ரஷ்யா இதுவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில், அமைதி திரும்ப வேண்டும் என்ற விவகாரத்தில் புடின் தீவிரமாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிய வருகிறது என்றார்.
பேச்சுவார்த்தைக்கு புடின் முன்வந்ததன் பின்னர், தீவிரமான மற்றும் நீடித்த அமைதியை உறுதி செய்வதற்காக, போர் நிறுத்தத்தை கண்காணிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் மறுத்தால், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க நாம் அனைத்து சக்திகளையும் பயன்படுத்த வேண்டும் என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவுக்கு தாம் தெரியப்படுத்தும் செய்தி இதைவிடத் தெளிவாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஸ்டார்மர், உக்ரைன் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, இப்போதே போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள். அதுவரை அமைதியை நிலைநாட்ட நாங்கள் 24 மணி நேரமும் பாடுபடுவோம் என்பது உறுதி என ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |