பரவும் புதிய தொற்று... சுவிஸ் விமான சேவையை உடனே நிறுத்துங்கள்: எழுந்த கோரிக்கை
பிரேசில் நாட்டில் உறுமாற்றம் கண்ட கொரோனா தொற்றால் அதிக பாதிப்பு ஏற்படாமல் இருக்க, உடனடியாக அந்த நாட்டுக்கான விமான சேவையை சுவிட்சர்லாந்து ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிரேசில் நாட்டில் மொத்த சுகாதார அமைப்பும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றானது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரேசிலின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 300,000 கடந்துள்ளது.
உருமாற்றம் கண்டுள்ள புதிய தொற்றானது வேகமாக பரவும் தன்மை கொண்டது மட்டுமின்றி, உயிருக்கு அச்சுறுத்தலானது கூட என்ற தகவல் மேலும் பீதியை கிளப்பியுள்ளது.
இந்த நிலையிலேயே பிரேசிலுக்கான விமான சேவையை சுவிஸ் நிர்வாகம் உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சுவிஸில் இருந்து பிரேசிலுக்கு தினசரி விமான சேவை முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது பிரேசிலின் நிலைமை கவலையளிக்கும் வகையில் உள்ளதால் தகுந்த முடிவை உடனே எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் இதுவரை 12 பேர்களுக்கு பிரேசில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இருப்பினும், இது அதிக எண்ணிக்கையிலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற அச்சமும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பிரேசில் தொற்று தொடர்பில் பயப்படும்படி இல்லை என்றே சுவிஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி சுவிஸில் பிரேசில் தொற்று பரவல் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும், தற்போதுள்ள தடுப்பூசிகள் போதுமானதாக உள்ளது எனவும் நம்பிக்கை அளித்துள்ளனர்.