பிரித்தானியாவைத் தாக்கும் புயல் Eowyn... ரயில் சேவைகள் ரத்து, சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
இயோவின் புயல் காரணமாக ஸ்கொட்லாந்தில் வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்றும் மணிக்கு 100 மைல் வேக காற்று வீசக் கூடும் என்பதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணம் செய்ய வேண்டாம்
Eowyn புயலானது நூறு ஆண்டுகளில் இல்லாத ஒரு நிகழ்வு என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை அலுவலகம் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்காட்ரயில் தனது அனைத்து சேவைகளும் நாளை நிறுத்தப்படும் என்றும், ரயில் சேவைகள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
மட்டுமின்றி, மாற்று போக்குவரத்தும் இருக்காது என குறிப்பிட்டுள்ளனர். ஸ்கொட்லாந்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்படும். மிக உயர் வகை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மிக மோசமான புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மஞ்சள் மற்றும் அம்பர் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய புயல் முன்னறிவிப்பு சேவையின்படி, லண்டனுக்கும் பிரிஸ்டலுக்கும் இடையில் வசிக்கும் மக்களுக்கு சூறாவளி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
ஸ்கொட்லாந்தின் தலைநகரில் உள்ள பள்ளிகள், நர்சரிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் நாளை மூடப்படும். எடின்பர்க் நகர சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கவுன்சில் பள்ளிகள், நர்சரிகள் என அனைத்தும் ஜனவரி 24ம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும்.
சாலைகளைத் தவிர்க்குமாறு
பூங்காக்கள், மைதானங்கள், அருங்காட்சியகங்கள், காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் கலாச்சார இடங்களும் மூடப்படும். ஸ்காட்லாந்து காவல்துறையும் ஸ்காட்ரெயிலுடன் பயணம் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, Eowyn புயல் காரணமாக நாளை அயர்லாந்துக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் பாதிக்கப்படலாம் என்று Ryanair விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகவும் அவசியமான சூழ்நிலைகள் தவிர, நாளை சாலைகளைத் தவிர்க்குமாறு சாரதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |