வேகமெடுக்கும் காற்றழுத்த தாழ்வுமண்டலம்.., அடுத்த 2 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுபெறும்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. அதன்படி, 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
அடுத்த 2 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
இன்று புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |