Goretti புயல்: பிரித்தானியாவில் இருளில் மூழ்கிய 44,000 வீடுகள்
பிரித்தானியாவை கோரெட்டி என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று வாட்டிவதைத்துவருவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய 44,000 வீடுகள்
கோரெட்டி புயல், மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று மற்றும் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பிரித்தானியாவில் 44,000 க்கும் அதிகமாக வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில்தான் அதிக மின்தடைகள் ஏற்பட்டுள்ளன. அந்த பகுதிக்கு வியாழக்கிழமை அன்று, காற்று தொடர்பில் அரிய ’உயிருக்கு ஆபத்து’ சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பிரித்தானியா முழுவதும் பனி, பனிக்கட்டி மற்றும் மழைக்கான பல வானிலை எச்சரிக்கைகள் வானிலை ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது பனி மற்றும் பனிக்கட்டிக்கான இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. மான்செஸ்டரிலிருந்து ஸ்காட்லாந்தின் பெரும்பகுதி வரை நீடிக்கும் ஒரு மஞ்சள் எச்சரிக்கை மதியம் 12:00 மணிக்கு முடிவடைய உள்ளது.
அதே நேரத்தில், பீட்டர்பரோ பகுதியிலிருந்து வடகிழக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பகுதி வரை நீடிக்கும் மற்றொரு மஞ்சள் எச்சரிக்கை நாளை மதியம் 3:00 மணி வரை அமுலில் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வட அயர்லாந்தை உள்ளடக்கிய மூன்றாவது பனி எச்சரிக்கை, நாளை காலை 11:00 மணி வரை அமுலில் இருக்கும்.

இதற்கிடையில், இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதி முழுவதற்குமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், பாத் முதல் இங்கிலாந்தின் மேற்கு கடற்கரை முழுவதும் மற்றும் நியூகேஸில் வரை பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் இன்று மதியம் 12:00 மணிக்கு முடிவடைகின்றன.
மேற்கு இங்கிலாந்தின் பெரும்பகுதிகளுக்கு இன்று மதியம் 12:00 மணி வரை, மஞ்சள் பனி எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
அத்துடன், போக்குவரத்து, குறிப்பாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மக்கள் பயணிக்கும் முன் தங்கள் பகுதி வானிலை எச்சரிக்கை குறித்து அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |