தமிழகத்தை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.., 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது.
இது, நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.
இது நாளை ஆந்திர - வடதமிழகம் கடற்கரையை நோக்கி நகரும் என்றும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை நோக்கி நகரும்போது சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 25, 26ஆம் திகதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.
விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்காலிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் 25ஆம் திகதி லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும், 26, 27ஆம் திகதிகளில் மிதமானது முதல் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |