பிரித்தானியாவில் வாழும் ஆசையில் விமான சக்கரத்துக்குள் அமர்ந்து பயணித்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்...
ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து, பிரித்தானியாவில் வாழும் ஆசையுடன் விமான சக்கரம் ஒன்றிற்குள் ஏறி மறைந்து பயணித்த ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோக நிகழ்வொன்று நிகழ்ந்துள்ளது.
விமான சக்கரத்துக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல்
இம்மாதம் 7ஆம் திகதி, Gambia நாட்டிலிருந்து லண்டன் Gatwick விமான நிலையம் வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரத்துக்குள், அதாவது, விமானம் தரையிலிருந்து மேலெழுந்ததும் அதன் சக்கரம் உள்ளிழுக்கப்பட்டு வைக்கப்படுவதற்காக ஒரு இடம் இருக்கும், அந்த இடத்தில் ஒரு உயிரற்ற உடல் இருப்பதை அதிகாரிகள் கண்டுள்ளார்கள்.
2,700 மைல்கள் சக்கரத்துக்குள் அமர்ந்து பயணித்த நபர்
உயிரிழந்த அந்த நபர், Gambia நாட்டிலிருந்து 2,700 மைல் தூரம் சக்கரத்துக்குள் அமர்ந்து பயணித்துள்ளார். அந்த சக்கரம் உள்ளிழுக்கப்பட்டு வைக்கப்படுவதற்கான இடம் பயங்கரமாக குளிர்ச்சியாக இருக்கும். அதுவும் இந்த குளிர்காலத்தில் அந்த இடத்தில் அமர்வது பயங்கரமான ஒரு அனுபவமாக இருக்கும்.
அந்த இடத்தில் சுமார் ஆறு மணி நேரம் அமர்ந்து பயணித்துள்ளார் அந்த நபர். அப்படியும், அவரது பிரித்தானிய கனவு பலிக்கவில்லை.
அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவர் யார் என்று தெரியவில்லை. அவரைக் குறித்த விவரங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.