வெளிநாட்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர்
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் நடந்த ஆயுத தாக்குதலின் போது சுவிஸ் நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
குறித்த சுவிஸ் நாட்டவர் சனிக்கிழமை மாலை ஒரு சிறிய குழுவின் ஒரு பகுதியாக தென்மேற்கு ஒகுன் மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு மையத்திற்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையிலேயே திடீரென்று ஆயுதம் தாங்கிய அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சுவிஸ் நாட்டவரும், அவருடன் இருந்த நைஜீரிய நாட்டவர் ஒருவரும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர்.
ஆயுததாரிகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் நைஜீரியர் ஒருவர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடத்தப்பட்ட அந்த சுவிஸ் நபர் ஏன் நைஜீரியாவில் இருந்தார் என்பதற்கான பின்னணி தொடர்பில் விசாரிக்கப்படும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியா உள்ளிட்ட பிரதான ஆபிரிக்க நாடுகளில் கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்தே காணப்படுகிறது. பெரும்பாலும் போகோ ஹராம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளே, பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.
சுவிஸ் நாட்டவர் கடத்தப்பட்ட விவகாரத்தில் நைஜீரியாவில் உள்ள சுவிஸ் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது என தெரிய வந்துள்ளது.