பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள்
இந்திய இளம்பெண்ணொருவர் கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருமணமாகி தன் கணவருடன் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்தார் ஹர்ஷிதா ப்ரெல்லா (24) என்னும் இளம்பெண்.
ஹர்ஷிதாவும் அவரது கணவரான பங்கஜ் லம்பாவும் (23) இங்கிலாந்திலுள்ள Corby என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஹர்ஷிதா.
ஹர்ஷிதாவை அவரது கணவரான பங்கஜ் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.

புதிய தகவல்கள்
இந்நிலையில், பங்கஜ் குறித்த புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. உண்மையில், பங்கஜுக்கும் மது பாண்டே என்னும் பெண்ணுக்கும் ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது.
அந்தப் பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். ஹர்ஷிதாவைக் கொலை செய்துவிட்டு பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த பங்கஜ், மீண்டும் தன் காதலியுடனும் அவளுடைய மகளுடனும் சேர்ந்துவிட்டதாக மெயில் ஆன்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராம் என்னுமிடத்தில் மது பாண்டே கடை ஒன்றை நடத்திவரும் நிலையில், அவர்களுடன் பங்கஜ் இணைந்துகொண்டதாகவும், எப்போதும் மாஸ்குடனேயே அவர் காணப்படுவதாகவும் அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனராம்.

விடயம் என்னவென்றால், பங்கஜ் இரட்டை வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளார். தனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மறைத்து ஹர்ஷிதாவை மணந்துகொண்ட பங்கஜ், ஹர்ஷிதா சேமிப்பான பணத்தை இந்தியாவிலிருக்கும் தன் காதலிக்கு அனுப்பிவந்துள்ளார்.
பங்கஜ் பிரித்தானியாவில் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிவந்த நிலையில், ஹர்ஷிதா தகவல் தொழில் நுட்பம் சார்ந்த அலுவலகம் ஒன்றில் பணியில் இணைந்துள்ளார்.
கடுமையாக உழைத்து பதவி உயர்வும் பெற்ற ஹர்ஷிதா, பங்கஜை விட அதிக வருவாய் ஈட்டி வந்துள்ளார்.
இப்படி ஹர்ஷிதாவைக் கொலை செய்த பங்கஜ் குறித்து அவ்வப்போது புதிய தகவல்கள் வெளியாகிவந்தாலும், அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.