பிரித்தானியாவில் இனி ஒருவரது கழுத்தை நெறித்தால் கடுமையான தண்டனை விதிப்பு!
பிரித்தானியாவில் இனி ஒருவரது கழுத்தைப் பிடித்து நெரித்தால் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளது.
குடும்ப பிரச்சினைகளில் பெரும்பாலான குற்றவாளிகள் பாதிக்கப்படுபவரின் கழுத்தை நெறிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
அவ்வாறு குற்றம் சாட்டப்படுபவர்கள் பெரும்பாலும் பொதுவான 'தாக்குதல்' குற்றச்சாட்டுக்கு மட்டுமே உட்படுத்தப்படுவார்கள், அதாவது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்கள்.
இதில், குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் மற்றும் பிரச்சாரகர்கள் முயற்சித்து தோல்வியுற்றனர்.
அரசாங்கம் ஆரம்பத்தில் சட்டத்தை மாற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று கூறியிருந்தது.
முன்னாள் 'பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆணையர்' Lady Newlove மற்றும் பிரச்சாரகர்கள் இணைந்து கடந்த மாதம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என மனு அளித்திருந்த நிலையில், இப்போது உள்நாட்டு துஷ்பிரயோக மசோதாவில் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய உள்நாட்டு துஷ்பிரயோக சட்டத் திருத்த மசோதாவில், வேண்டுமென்றே மற்றொரு நபரை கழுத்தை நெரிப்பது அல்லது அவர்களின் சுவாச திறனை பாதிக்கும் வேறு எந்த செயலையும் செய்வது ஒரு குறிப்பிட்ட குற்றமாக மாற்ற அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதனடிப்படையில், குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படவுள்ளது.
இது பெரும்பாலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்படும் இந்த சட்டம், தற்போது House of Lords-ல் பரிசீலிக்கப்படுகிறது.