இனி இணையத்தில் இதையெல்லாம் செய்தால் கடுமையான தண்டனை: பிரித்தானியாவில் மசோதா அறிமுகம்
பிரித்தானியாவில் ஒன்லைன் பாதுகாப்பு மசோதா ஒன்றின் மீதான விவாதம் நடந்து வருகிறது.
சமூக ஊடகங்கள் பெருத்துப்போனதால், அவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இணையம் வாயிலாக சட்ட விரோத போதைப் பொருட்கள் விற்பனை, ஆயுதங்கள் விற்பனை, கடத்தல், மோசடி, பெண்களின் நிர்வாணப்படங்களைத் திருடி அவற்றைக் கொண்டு அவர்களை மிரட்டுதல் என பல்வேறு விடயங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன.
இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒன்லைன் மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அத்துடன், அந்த மசோதாவில் கூடுதலாக மூன்று அம்சங்கள் இணைக்கப்பட உள்ளன.
சமூக ஊடக நிறுவனங்கள் இந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கின்றனவா என்பது இனி மேற்பார்வை அமைப்பு ஒன்றின் மூலம் கண்காணிக்கப்படும்.
ஒன்லைன் பாதுகாப்பு மசோதாவில் என்னென்ன மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன?
- பழிவாங்குவதற்காக நிர்வாணப்படங்களை பயன்படுத்துதல், கடத்தல், மோசடி, சட்ட விரோத போதைப்பொருட்கள் மற்றும் ஆயுத விற்பனை ஆகியவை முதன்மை குற்றங்களாக கருத்தில் கொள்ளப்படும்.
- இதன் பொருள் என்னவென்றால், இணையதளங்கள், இந்த குற்றங்களுடன் தொடர்புடைய விடயங்களை நீக்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்படும், அத்துடன், அவற்றை பயனர்கள் பயன்படுத்துவதை தடுக்க முயற்சி எடுக்கவேண்டியிருக்கும்.
- இதுபோக, இனவெறுப்புக் குற்றங்கள், தற்கொலை, பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தூண்டுதல், மற்றும் சட்ட விரோத ஆயுதங்கள் விற்பனை ஆகியவையும் முதன்மைக் குற்றங்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.
- பிரபலங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானவர்களை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு ஒன்லைனில் கொலை, வன்புணர்வு மற்றும் தாக்குதல் மிரட்டல் விடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.
- இணையம் வழி துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர், பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை.
- வெடிகுண்டு மிரட்டல், அல்லது கோவிட் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 51 வாரங்கள் வரையில் சிறைத்தண்டனை, ஆகிய மாற்றங்கள் ஒன்லைன் பாதுகாப்பு மசோதாவில் செய்யப்பட உள்ளன.