சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரான் விமானத்திலிருந்த சர்வதேச மாணவர்... மனைவி வெளியிட்டுள்ள ஏமாற்றமளிக்கும் செய்தி
ஈரானிலிருந்து கனடா நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் நினைவிலிருக்கலாம்... அந்த விமானத்தில் பயணித்து பலியான கனேடியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கனடா நிரந்தர வாழிட உரிமம் அளிக்க முன்வந்துள்ளது. இந்த செய்தி பலருக்கு ஆறுதலளிக்கும் நிலையில், அந்த விமானத்தில் பயணித்து உயிரிழந்த Mansour Esnaashary Esfahani என்பவரின் மனைவியான Hanieh Dehghan, தனக்கு அந்த செய்தியால் லாபம் எதுவும் இல்லை என்கிறார். அதாவது, Mansour ஒரு சர்வதேச மாணவர்.
தற்போது அளிக்கப்பட்டுள்ள சலுகையின்படி, அந்த விமான விபத்தில் பலியானவர் ஒரு கனேடிய குடிமகனாகவோ, நிரந்தர வாழிட உரிமம் கொண்டவராகவோ இருக்கவேண்டும் என்பது போன்ற சில விதிமுறைகள் உள்ளன. Mansour ஒரு சர்வதேச மாணவர் மட்டுமே என்பதால், Haniehக்கு அந்த சலுகை பொருந்தாது.
ஆனால், என்னைப் பொருத்தவரை நாம் எல்லோருமே சமம்தான் என்பதால், கனடா அரசு வழங்கும் இந்த உதவி நம் எல்லோருக்குமே தேவைப்படுகிறது, ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கனடா அரசு இந்த விடயத்தில் எங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்கிறார். அந்த விமான விபத்தில் பலியான 176 பயணிகளில் 55 பேர் கனேடியர்கள், 30 பேர் நிரந்தர வாழிட உரிமம்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.