ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள், அழுதுகொண்டே தேர்வெழுதிய மாணவிகள்! நீட் தேர்வு விவகாரத்தில் கொந்தளித்த பெற்றோர்
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்ற சொன்ன விவகாரத்தில், மாணவிகளின் பெற்றோர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றுமாறு தேர்வு மைய அதிகாரிகள் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, மாணவிகள் பலர் வேறு வழியின்றி உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு எழுதினர். இந்த விவகாரத்தால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அன்றைய தினமே மாணவி ஒருவரின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அவர் தனது மகள் குறித்து கூறும்போது, 'தான் படித்ததை எல்லாம் அவள் மறந்துவிட்டதாக தெரிவித்தார்.
PTI
தேசிய தேர்வு முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில், எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, தேர்வு எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் கொண்டு செல்லப்பட்டன என எனது மகள் தெரிவித்தாள். பலர் அழுது கொண்டிருந்தனர். நீட் தேர்வு என்பது முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கிறது.
அப்படியிருக்க இம்மாதிரியான கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதை கட்டிக் கொண்டனர்' புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
PTI
இதுகுறித்து கேரளாவின் சமூக நலத்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், 'இது ஒரு அவமரியாதை செயல் என்பதால் இதுகுறித்து மத்திய அரசிற்கும், தேசிய சோதனை முகமைக்கும் கடிதம் எழுதவிருக்கிறேன். இம்மாதிரியான செயல்கள் மாணவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.
PTI