மருத்துவக் கலந்தாய்வு: இவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை
அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சிறப்பு சுற்றில் கலந்துகொண்டு இடம்கிடைத்தும் மருத்துவ கல்லூரியில் சேராத மாணவர்கள் ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுத முடியாது என மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கல்லூரிகளில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவ கலந்தாய்வுக் குழு நிரப்பும்.
மேலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான கலந்தாய்வையும் மருத்துவ கலந்தாய்வுக் குழு நடத்தும்.
https://mcc.nic.in/ ஆன்லைன் மூலமாக நடைபெறும் இக்கலந்தாய்வில் , முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளின் பட்டியலை சமர்பிக்கலாம்.
அனைத்து மாணவர்களும் சமர்பித்த பின்னர், மாணவர்களுக்கான கல்லூரிகள் ஒதுக்கப்படும், இதில் தங்களுக்கு விரும்பிய கல்லூரிகள் கிடைக்காத மாணவர்கள் இரண்டாவது சுற்றில் பங்கேற்பார்கள்.
முதல் சுற்றில் செய்தது போன்றே தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை வரிசைப்படுத்தலாம், இதற்கு பின்னர் மாப் அப் சுற்று நடைபெறும்.
இதில் பங்கேற்கும் மாணவர்கள் எந்த கல்லூரியையும் தேர்வு செய்திருக்க கூடாது, புதிதாக விண்ணப்பிப்பது போன்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால் தற்போது இந்த விதி தளர்த்தப்பட்டு, முதல் இரண்டு சுற்றுகளை போன்றே மூன்றாவது சுற்றிலும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பட்டியலை சமர்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதியும், இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9-ம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ம் தேதியும் நிறைவடையும்.
காலி இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு செப்டம்பர் 21-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொண்டு ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் இடம்கிடைத்தும் சேராதவர்கள் நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |