கல்வியை இடைநிறுத்தி தொழில்களை தேடிச்சென்றுள்ள மாணவர்கள்
கோவிட் தொற்றின் போது வகுப்பறை கற்றலை மாணவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கான ஒரு பயனுள்ள திட்டத்தை அரசாங்கம் பின்பற்றத் தவறியமைக் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதான கல்வி சங்கம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் துறை மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்கள் பாடசாலைக்கல்வி இடைநிறுத்தி தொழில்களை தேடிச்சென்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கல்வி முறையினால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் இந்த கடினமான காலங்களில் தங்கள் குடும்பங்களின் நலனுக்கான பணம் சம்பாதிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மாணவர்கள் - கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு விநியோகப்பணிகளை மேற்கொண்டு வருவதாக தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவர்களிடையே இணையம் மூலமான வகுப்புகள் மற்றும் தொலைக்காட்சி வழியாக நடத்தப்படும் கற்றல் நிகழ்ச்சிகள் உரிய பயன்களைத் தரவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து கடந்த 15 மாதங்களில் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதில் கல்வி அமைச்சகம் வெற்றிபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
உயர்தர வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நுழைவதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக கல்விப்பொதுத்தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் திகதிகளை மாற்றுவதற்கான திட்டம் மட்டுமே முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.