நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் விவகாரம்: தனக்கு துரோகம் செய்த மூன்று நாடுகளை மூன்று விதமாக அணுகும் பிரான்ஸ்
நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் விவகாரத்தில், அமெரிக்கா, பிரித்தானியாவுடன் சேர்ந்து அவுஸ்திரேலியா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பிரான்ஸ் கொந்தளித்தது உலகம் அறிந்த செய்தி.
அதாவது, அவுஸ்திரேலியாவும் பிரான்சும், 50 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மதிப்பிலான நீர்மூழ்கிக்கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென அந்த ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா ரத்து செய்துவிட்டது. அது போதாதென, அமெரிக்கா, பிரித்தானியாவுடன் இணைந்து நீர்மூழ்கிக்கப்பல் தயாரிக்கும் AUKUS ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் உடனடியாக அது கையெழுத்தும் இட, பிரான்ஸ் கோபத்தில் கொந்தளித்தது.
அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதர் உடனடியாக பாரீஸுக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
அத்துடன், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது அழைப்பையும் ஏற்க மறுத்துவிட்டார் மேக்ரான்.
ஆனால், மூன்று நாடுகள் இணைந்து துரோகம் செய்ததாக கூறிய பிரான்ஸ் ஜனாதிபதி அவுஸ்திரேலியாவை புறக்கணிக்கும் அதே நேரத்தில், அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் புறக்கணிக்கவில்லை. அவுஸ்திரேலிய தூதரை திரும்பப் பெற்ற அதே நேரத்தில் அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதரையும் பிரான்ஸ் திரும்ப அழைத்தாலும், தற்போது மீண்டும் அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதர் வாஷிங்டன் திரும்பிவிட்டார், மேக்ரானும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் செப்டம்பர் 22 அன்றே தொலைபேசி வாயிலாக பேசிக்கொள்ளவும் செய்துவிட்டார்கள்.
ஒருபடி மேலே போய், பிரித்தானிய தூதரை மேக்ரான் திரும்ப அழைக்கவேயில்லை, அத்துடன் அவரும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் கடந்தவாரம் தொலைபேசியில் பேசிக்கொள்ளவும் செய்தார்கள்.
ஆனால், அவுஸ்திரேலியாவை பிரான்ஸ் புறக்கணிக்கிறது. அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சந்திப்பு ஒன்றிற்காக அடுத்த வாரம் பாரீஸ் வர இருந்த நிலையில், அவரை சந்திக்க பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் மறுத்துவிட்டார்.
அத்ற்குக் காரணம், பிரான்ஸ், 50 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மதிப்பிலான நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பு ஒப்பந்தம் கைநழுவிப்போனது மட்டுமின்றி, இந்தோ பசிபிக் பாதுகாப்புத் திட்டத்தில் தான் உறுதியான கூட்டாளியாக எண்ணிக்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவுடனான கூட்டணி சிதைந்துபோனதும்தான்.
மேலும், இந்த ஆண்டு இறுதிவாக்கில் ஐரோப்பிய ஒன்றியமும் அவுஸ்திரேலியாவும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தன.
ஆனால், நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பு விடயத்தில் முதுகில் குத்திய அவுஸ்திரேலியாவை நம்பி எப்படி அந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார் பிரெஞ்சு ஐரோப்பிய அமைச்சரான Clement Beaune.
இதற்கிடையில், பிரான்சின் ஏமாற்றத்தைத் தாங்கள் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஸ்காட் மோரிசன், தங்களுக்குப் பொறுமை தேவை என்று கூறியுள்ளார்.
பிரான்ஸ் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு கோர திட்டமிட்டிருக்கும் நிலையில், பிரான்ஸ் பக்கத்துச் செய்தியுடன் பிரான்சிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கான தூதர் கேன்பெர்ராவுக்கு திரும்பினால்தான் பிரான்ஸ் அவுஸ்திரேலிய உறவு தொடர்பில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பதே தெரியவரும்!