இருளில் மூழ்கிய முழு இலங்கை - மின்தடைக்கு ஒரு குரங்கு தான் காரணமா?
இலங்கை முழுவதும் நேற்று திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து முழு இலங்கையும் இருளில் முழ்கின.
இருளில் மூழ்கிய இலங்கை...
அதன்படி மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார வாரியம் (CEB) தெரிவித்துள்ளது.
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட 'அவசரகால சூழ்நிலை' காரணமாக தீவு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது.
அதையடுத்து குரங்கின் செயற்பாட்டாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடைக்கு குரங்கு காரணமா?
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் உள்ள மின் கம்பிகளில் குரங்கு ஒன்று விழுந்ததால் தீவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
அதையடுத்து பல இடங்களில் மின்சார தடை சீரமைக்கப்பட்டது. கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) தெரிவித்தது.
எனவே மின்சாரம் மீண்டும் கிடைக்கும் வரை, தற்போதைய நிலைமை காரணமாக, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.
மேலும் அதையடுத்து சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு, இரவு 8 மணியளவில் மீண்டும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |