இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் கோடிகளை குவித்து வைத்திருக்கும் சுதா மூர்த்தி: அவரது மொத்த சொத்து மதிப்பு
சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தெரிவு செய்யப்பட்ட சுதா மூர்த்திக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மூர்த்தி அறக்கட்டளைக்கு தலைமை
குறித்த பங்குகளின் மொத்த மதிப்பு என்பது சுமார் ரூ 5,600 கோடி என்றே கூறப்படுகிறது. இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மனைவியே இந்த சுதா மூர்த்தி.
மேலும், மூர்த்தி அறக்கட்டளைக்கு தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன், தொண்டு சேவைகளிலும் சுதா மூர்த்தி ஈடுபட்டு வருகிறார். மாநிலங்களவைக்கு ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டும் உறுப்பினர்களில் ஒருவராக தற்போது சுதா மூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிஎஸ்இ-யில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய பங்குத் தகவல்களின்படி, சுதா மூர்த்தி 3.45 கோடி இன்ஃபோசிஸ் பங்குகளை வைத்திருக்கிறார். பிஎஸ்இயில் இன்ஃபோசிஸின் தற்போதைய சந்தை விலை என்பது ஒரு பங்கிற்கு ரூ 1616.95 என தெரிய வந்துள்ளது.
பங்குகளின் மதிப்பு ரூ 5,586.66 கோடி
இதனால் சுதா மூர்த்தி கைவசம் வைத்திருக்கும் இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ 5,586.66 கோடி என்றே கூறப்படுகிறது. அதே வேளை, இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்திக்கு 1.66 கோடி பங்குகள் மட்டுமே தற்போது கைவசம் உள்ளது என்றும், அதன் மதிப்பு ரூ 2,691 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.
சந்தை மதிப்பின் அடிப்படையில் இன்ஃபோசிஸ் நாட்டின் ஏழாவது பெரிய நிறுவனமாகும். வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 6,71,121 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது.
சுதா மூர்த்திக்கு 2006ல் பத்மஸ்ரீ விருதும் 2024 ஜனவரியில் பத்ம பூஷன் விருதும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |