பிரான்சில் மரண அடி வாங்கும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்
பிரான்சில் முன்னெடுக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தலில் ஜனாதிபதி இமானுவல் கட்சி பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் LREM கட்சி பல மாகாணங்களில் 10% வாக்குகளை கூட பெற முடியாமல் போயுள்ளது.
அதேவேளை குடியரசுக் கட்சியினர் பொதுமக்களிடையே தங்கள் செல்வாக்கை இந்த முறை மீட்டெடுத்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Marine Le Pen-ன் NR கட்சியும் பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது.
இதனிடையே, முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியான வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் NR கட்சிக்கு தேசிய அளவில் வெறும் 19% வாக்குகள் மட்டுமே கிட்டும் என தெரிய வந்துள்ளது.
இது கடந்த 2015 மாகாணசபைத் தேர்தலில் கிடைத்த வாக்குகளில் 9% குறைவாகும். இரண்டு சுற்றுகள் கொண்ட இந்த தேர்தலில் இரண்டாவது சுற்று அடுத்த ஞாயிறு முன்னெடுக்கப்படும்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளர் சேவியர் பெர்ட்ராண்ட் 44% வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட NR கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் சேவியர் பெர்ட்ராண்ட் தெரிவிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் முதல் சுற்று தேர்தலில் நாங்கள் இரண்டாவது வந்தோம், தற்போது மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
முதல் சுற்றில் NR கட்சியின் பரிதாப நிலை மட்டுமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கொஞ்சம் நிம்மதி அளிக்கும் செய்தி என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.