பிரித்தானியாவில் உளவியல் பாதிப்பால் ஓய்வு அறிவித்த இந்திய வம்சாவளி எம்.பி.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடியா விட்டோம் என்ற இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர் உளவியல் பாதிப்பு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 2019ல் நடந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் 24 வயதான நாடியா விட்டோம்(Nadia Whittome).
நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த வயதுடைய உறுப்பினர் என்ற பெருமைக்குரிய இவர், 2020ல், கொரோனா பாதிப்பு காலத்தில் பகுதி நேரமாக முதியோர் இல்லத்தில் ஆரோக்கியப் பராமரிப்பாளராக பணியாற்றினார்.
அப்போது, கொரோனா நோயாளிகளின் அவலங்கள் அவரை ரொம்பவே பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நாடியா விட்டோம், சமூக ஊடகங்களில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், ஓராண்டுக்கு மேலாக மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நிலையிலும், என் தொகுதி மக்களின் பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தேன்.
என் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், நான் பல வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதனால், நான் பல வாரங்கள் ஓய்வில் செல்கிறேன்.
இந்த முடிவிற்கு என் கட்சித் தலைமை ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி. நான்கில் ஒருவருக்கு மன நோய் ஏற்படுகிறது. அதை வெளியே சொல்வதை பலர் அவமானமாக கருதுகின்றனர்.
அது தவறு என்பதற்காகவே வெளிப்படையாக என் நோய் குறித்து கூறுகிறேன். பூரண உடல்நலத்துடன் மீண்டும் பணிகளை தொடருவேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நாடியா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தன் ஊதியத்தில் பெரும்பகுதியை தொகுதி மக்களுக்கு செலவிட உள்ளதாக அறிவித்திருந்தார்.
தற்போது தாம் ஓய்வில் இருந்தாலும், தமது அலுவலகம் வழமையாக செயல்படும் எனவும், தொகுதி மக்கள் தயக்கமின்றி தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.