சிக்கலில் சிக்கிய சென்னை அணி - ஐபிஎல் தொடரை நினைத்து ரசிகர்கள் கவலை
நடப்பாண்டு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை அணியில் பரிதாபமான சூழல் நிலவுவதாக முன்னாள் வீரர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே நடப்பு சாம்பியனான சென்னை அணி சூரத்தில் உள்ள லால்பாய் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறது.
எப்போதும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் சென்னை அணி இம்முறை பலம் குறைந்த அணியாக பார்க்கப்படுகிறது. காரணம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தான். மெகா ஏலத்தில் சஹாரை வாங்க ரூ. 14 கோடி செலவழித்து மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியாமல் கோட்டை விட்டது ஆகும். ஆனால் அவர் தற்போது காலில் ஏற்பட்ட தசை நார் கிழிவு பிரச்சினையால் இந்த தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர், ஆகாஷ் சோப்ரா, டேனியல் விட்டோரி ஆகியோர் சென்னை அணியின் தற்போது நிலை குறித்து பேசியுள்ளனர். அதில் தீபக் சாஹர் இல்லாதது அணிக்கு பெரிய நஷ்டமாகும். அவருக்கு மாற்றாக கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே இருந்தாலும், தோனி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அதேசமயம் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு தோனி, ஸ்பெஷல் வகுப்பு எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.