ஐபிஎல் 2022! தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் தினேஷ் கார்த்திக்கை தட்டி தூக்க காத்திருக்கும் அணி
ஐபிஎல் 2022ல் தமிழக வீரர் நடராஜன் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு முதல் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள்வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
இந்த புதிய அணிகளுக்கு தரமான வீரர்களை உறுதிசெய்யும் விதமாக, 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவுசெய்துள்ளது. இதனால், ஏற்கனவே இருக்கும் அணிகள் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேர்வரை மட்டுமே தக்கவைக்க முடியும் என பிசிசிஐ அறிவித்தது.
இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி) ஆகியோரை மட்டும் தக்கவைத்துள்ளது. இதன்மூலம், ரஷித் கான் லக்னோ அணிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
நடராஜனுக்கு இடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மெகா ஏலத்தின்போது அந்த அணி முக்கியமாக 3 பேரை தட்டித்தூக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடராஜன்
தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், கடந்த சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சில போட்டிகளில் விளையாடிய நிலையில், முழங்கால் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார். இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், களமிறங்கவில்லை. மொத்தம் 24 போட்டிகளில் 8.24 எகனாமியுடன் 20 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர் என்பதால் இவரை வாங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜேசன் ராய்
ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஜேசன் ராய்க்கு கடந்த சீசனில் போதுமான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 5 போட்டிகளில் களமிறங்கி 123.96 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 150 ரன்களை குவித்து அசத்தினார். குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 42 பந்துகளில் 60 ரன்கள் குவித்து மேட்ச் வின்னராக இருந்தார். இவரை தட்டித்தூக்க அந்த அணி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
தினேஷ் கார்த்திக்
மொத்தம் 192 ஐபிஎல் போட்டிகளில் 129.72 சராசரியுடன் 4046 ரன்களை குவித்துள்ள தினேஷ் கார்த்திக், அதில் 19 அரை சதங்களையும் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பராக 147 பேரை வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி, பார்மை நிரூபித்தார். மிடில் வரிசையில் சிறப்பாக விளையாடக் கூடியவர். அனுபவம் வாய்ந்த இவர் அணியில் எடுக்கப்படலாம்