இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்துள்ள கெளரவம்
இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி தனது முத்திரையை பதித்தவர் வாஷிங்டன் சுந்தர். ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூரு அணியிலும், டி.என்.பி.எல். என அழைக்கப்படும், தமிழ்நாடு கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டியில் தூத்துக்குடி அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
சென்னையில் வசித்துவரும் இவர், பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய வாக்காளர் தினமான நேற்று இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நம்ம சென்னையின் தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளதை மிகவும் சந்தோஷத்துடன் அறிவிக்கிறோம். வரும் தேர்தலில் அனைவரும் 100 சதவீத ஒத்துழைப்புடனும், நெறிமுறையுடன் தங்களது வாக்குகளை அளிப்போம் என கூறப்பட்டுள்ளது.