பெங்களூரு அணியின் கேப்டனாக இவரை போடலாம் - சுனில் கவாஸ்கர் யோசனை
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கான கேப்டன் தேர்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் 15வது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் வீரர்களின் மெகா ஏலமானது பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களைத் தவிர்த்து தேவைப்படும் வீரர்களை ஏலத்தின் மூலம் தேர்வு செய்தது. அந்த வகையில் பெங்களூரு அணி விராட் கோலி, முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்தது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடியும் முன்னர் இந்த சீசன் வரைதான் தான் கேப்டனாக செயல்படுவேன் என விராட் கோலி தெரிவித்ததால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் பெங்களூர் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல்லை நியமிக்கலாம் என்று தான் கருதுவதாகவும், ஏனெனில் கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பேட்டிங்கில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் மேக்ஸ்வெல் போன்ற வீரரை கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் தான் விளையாடும் ஷாட்டுகளில் மீது கவனம் செலுத்துவார். இதனால் கடினமான சமயங்களில் கூட அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியும் எனவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.