13 பந்துகளில் அரைசதம் - சாதனைப் படைத்த சுனில் நரைன்
வங்கதேச பிரீமியர் லீக்கில் விக்டோரியன்ஸ் அணி வீரரான சுனில் நரைன் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் எனப்படும் வங்கதேச பிரீமியர் லீக்கில் குவாலிபயர் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு அணியாக ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் இரண்டாவது குவாலிபயர் போட்டி சொட்டகிராம் சேலஞ்சர்ஸ் மற்றும் கொமிலா விக்டோரியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சொட்டகிராம் அணி 19.1 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மெஹதி ஹாசன் 44 ரன்களும் அக்பர் அலி 33 ரன்களும் குவித்தனர்.
தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொமிலா அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் மாற்று தொடக்க வீரராக களம் கண்ட சுனில் நரைன் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதனால் 12 பந்துகளில் அரைசதம் எடுத்த யுவராஜ் சிங்கின் சாதனையை அவர் முறியடிக்க தவறினார். ஆனால் யுவராஜின் 12 பந்துகளில் 50 ரன்கள் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ஹசரதுல்லா சசாய் ஆகியோர் சமன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.