100 பந்துகளில் 241 ஓட்டங்கள் விளாசிய அணி! வாணவேடிக்கை காட்டிய ரிக்கெல்டன், மார்ஷ்
The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட்டை வீழ்த்தியது.
லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் ரியான் ரிக்கெல்டன் 94 ஓட்டங்களும், மிட்செல் மார்ஷ் 76 ஓட்டங்களும் விளாசினர்.
சிக்ஸர்மழை கூட்டணி
லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்த சன்ரைசர்ஸ் லீட்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh), ரியான் ரிக்கெல்டன் (Ryan Rickelton) கூட்டணி சிக்ஸர்மழை பொழிந்தது.
முதல் விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 65 பந்துகளில் 148 ஓட்டங்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 37 பந்துகளில் 76 ஓட்டங்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் (Harry Brook) 18 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் ரிக்கெல்டன் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் லீட்ஸ் (Sunrisers Leeds) 100 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் (London Spirit) அணி 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பிரேவிஸ் (Brevis) 38 (21) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டேவிட் வில்லி (David Willey) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
எனினும், லண்டன் ஸ்பிரிட் அணி 100 பந்துகளில் 204 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் வெற்றி பெற்றது.
டேவிட் வில்லி ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 83 ஓட்டங்களும், ஜேமி ஓவர்டன் 15 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாசினர்.