மில்லியன் கணக்கில் உயிர் பலி வாங்க இருக்கும் சூப்பர் கிருமிகள்: அதிரவைக்கும் ஒரு தகவல்
உடல் நலம் சரியில்லை என்றதும், மருத்துவரை கலந்தாலோசிக்காமல் தாங்களே மருந்துகளை வாங்கி சாப்பிடுவோர், கொடுத்த மருந்தை முழுமையாக சாப்பிட்டு முடிக்காமல், கொஞ்சம் உடல் நிலை முன்னேறியதும் மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிடுவோர் ஏராளம்.
ஆனால், அப்படி செய்வது, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பது பலருக்கும் தெரியாது.
சூப்பர் கிருமிகள்
மனித உடலில், உள்ளும் புறம்பும், மில்லியன் கணக்கில் பாக்டீரியா நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.
பெரும்பாலும் அவை மனிதனுக்கு நன்மையே செய்கின்றன.
ஆனால், சரியாக, முறையாக, மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இஷ்டத்துக்கு மருந்துகளை எடுத்துக்கொள்வதால், இந்த கிருமிகளில் சில, கொடிய நோய்க்கிருமிகளாக மாறிவிடுகின்றன.
அவற்றை Antibiotic-resistant microbes அல்லது superbugs, அதாவது, சூப்பர் கிருமிகள் என மருத்துவ உலகம் அழைக்கிறது.
அதாவது, பல வகை மருந்துகளை, அதாவது இஷ்டத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆன்டிபயாட்டிகளை பார்த்துப் பார்த்து அவற்றை எதிர்க்கும் கிருமிகளாக மாறிவிடுகின்றன இந்த சூப்பர் கிருமிகள்.
ஆக, இந்த சூப்பர் கிருமிகள் ஒருவருக்குநோய்த்தொற்றை உண்டுபண்ணினால், அவரை குணப்படுத்துவது கடினம்.
அதாவது, அவருடைய உடலில் பெரும்பாலான மருந்துகள் வேலை செய்யாது. வேறு வகையில் கூறினால், அவருக்கு நோய்த்தொற்றை உண்டுபண்ணின கிருமிகளைக் கொல்ல மருந்துகள் இல்லாத நிலை உருவாகிவிடும். விளைவு?
மரணம் கூட நேரிடலாம்!
மில்லியன் கணக்கில் உயிர் பலி வாங்க இருக்கும் கிருமிகள்
2050ஆம் ஆண்டு வாக்கில், இந்த சூப்பர் கிருமிகள் 39 மில்லியன் மக்களை உயிர் பலி வாங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரொரன்றோவைச் சேர்ந்த Melissa Murrayக்கு ஒரு சிறிய காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் வழியாக உடலுக்குள் நுழைந்த ஒரு கிருமி, அவரை மரணத்தின் விளிம்பு வரை அழைத்துச் சென்றுவிட்டது.
காரணம், அந்த கிருமி ஒரு சூப்பர் கிருமி, அதாவது, மருந்துகளால் குணமாக்க முடியாத ஒரு கிருமி. அவரது காலில் இரண்டு இடங்களில் சதையை வெட்டி எடுத்துத்தான் அவருக்கு சிகிச்சையளித்தார்கள் மருத்துவர்கள்.
இப்போது அவர் ஒரு ஊன்றுகோல் உதவியுடன்தான் நடமாடுகிறார். அதுவே பெரிய அதிர்ஷ்டம்தான். காரணம், இந்த சூப்பர் கிருமியால் உலகின் இன்று பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், எல்லோரும் அல்ல, சில மருத்துவர்கள், ஒரு நோயாளிக்கு என்ன நோய்த்தொற்று? அது எந்த ஆன்டிபயாட்டிக்குக்கு குணமாகும் என்பதைக் கண்டறிய உதவும் Culture and Sensitivity என்னும் முக்கியமான, ஆனால், சற்றே செலவு அதிகமான ஆய்வகப் பரிசோதனையை செய்யாமலே, அந்த நோயாளிக்கு ஏதாவது ஒரு ஆன்டிபயாட்டிக் மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள்.
அதேபோல, சில நாடுகளில் மருத்துவரை கலந்தாலோசிக்காமலே, பரிசோதனைகள் செய்யாமலே சிலர் இந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள்.
அப்படிச் செய்வது ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகவே, நோயாளிகள் தரப்பிலும், மருத்துவர்கள் தரப்பிலும் ஆன்டிபயாட்டிக் சிகிச்சை விடயத்தில் அதீத கவனம் செலுத்துவது, இந்த ஆபத்தைக் குறைக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |