கனடாவில் வாழும் ஆசையிலிருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
கனடாவில் வாழும் ஆசையிலிருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.
ஆகத்து மாதத்தில் வெளியான அறிவிப்பு கொடுத்த ஏமாற்றம்
2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சூப்பர் விசா திட்டம், கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியையும் தங்களுடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்கவைக்க அனுமதி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
அதே நேரத்தில், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிக்காக ஆண்டுதோறும் மருத்துவக் காப்பீட்டுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற ஒரு நிலையும் உள்ளதை மறுப்பதற்கில்லை. சராசரியாக 65 வயதுடைய ஒருவருக்கு 1,500 டொலர்கள் வரை காப்பீட்டுக்காக கட்டணம் செலுத்தவேண்டும்.
இதற்குமுன், இந்த தொகையை மாத தவணைகளில் செலுத்தலாம் என்ற ஒரு வசதி இருந்தது. ஆனால், ஆகத்து மாதம் அந்த வசதி மாற்றப்பட்டது. ஆம், இனி அந்தத் தொகையை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தவேண்டும் என அறிவிப்பு வெளியானது.
India Picture / Shutterstock
காப்பீட்டுக்கான தொகையை ஆண்டுக்கு ஒருமுறை கட்டவேண்டும் என்ற அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கம்
பல தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் பாரம்பரியப்படி, கூட்டுக்குடும்பமாக வாழ்வதை விரும்பும் நிலையில், காப்பீட்டுக்கான தொகையை ஆண்டுக்கு ஒருமுறை கட்டவேண்டும் என்ற அறிவிப்பு, தங்கள் பெற்றோரை அழைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையிலிருந்த பலரை யோசிக்க வைத்தது. ஒரேநேரத்தில் எப்படி அவ்வளவு பெரிய தொகையை செலுத்துவது என யோசித்த பலர், தங்கள் பெற்றோரை தங்களுடன் அழைத்துக்கொள்ளும் திட்டத்தைத் தள்ளிப்போட்டார்கள்.
இந்நிலையில், அந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு. அதாவது, பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிக்கான காப்பீட்டுத் தொகையை இனி மாதத் தவணைகளாகவே செலுத்தலாம்.
Sarbmeet Singh
இந்த மாற்றம் காரணமாக இனி பலர் சூப்பர் விசாவுக்கு விண்ணப்பிப்பார்கள் என்கிறார் சர்ரேயை மையமாகக் கொண்டு பணியாற்றிவரும் புலம்பெயர்தல் ஆலோசகரான Raghbir Singh Bharowal.
ஆக, குடும்பமாக கனடாவில் வாழும் ஆசையிலிருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு இந்த அறிவிப்பு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.