பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மேக்ரானுக்கு உக்ரைன் ஜனாதிபதி முதல் புடின் விமர்சகர் வரை பேராதரவு
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் உள் நாட்டில் எப்படியோ தெரியவில்லை, வெளிநாடுகளிலிருந்து ஆதரவு குவிகிறது இமானுவல் மேக்ரானுக்கு.
ஆம், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், புடினை கடுமையாக விமர்சிப்பவரான அலெக்ஸி நவால்னியும் மேக்ரானுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இரண்டாவது சுற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், அவருக்கு ஆதரவாக வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும், அலெக்ஸி நவால்னியும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
சிறையிலிருக்கும் நவால்னி வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், பிரான்ஸ் மக்கள் மேக்ரானுக்கு வாக்களிக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெலன்ஸ்கியோ, தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், தான் பிரான்ஸ் தேர்தலில் தலையிட விரும்பவில்லை என்று கூறினாலும், அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
மேலும், மேக்ரானை எதிர்த்துப் போட்டியிடும் லீ பென்னுடைய கட்சி புடின் ஆதரவு வங்கியிலிருந்து 9 மில்லியன் யூரோக்கள் கடன் பெற்ற செய்தி அறிந்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு பிரான்ஸ் தேர்தலில் தலையிடும் உரிமை இல்லை என தான் கருதுவதாகத் தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, எனக்கும் மேக்ரானுக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது, அதை நான் இழக்க விரும்பவில்லை என்றார்.
ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் லீ பென்னுடைய பார்வை தவறானது என்று கூறியுள்ள ஜெலன்ஸ்கி, லீ பென் தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்தால் நமக்கிடையிலான உறவு மாறக்கூடும் என்றும் கூறியுள்ளார்.