பிரித்தானியாவில் குடியிருப்புக்குள் வெடிகுண்டு தயாரித்த ஆசிய வம்சாவளி நபர்: அவர் கூறிய விளக்கம்
பிரித்தானியாவில் குடியிருப்புக்குள் வெடிகுண்டு தயாரித்த வழக்கில் சிக்கிய ஆசிய வம்சாவளி நபர் குற்றவாளி என நீதிமன்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கையும் களவுமாக சிக்கிய நபர்
அவருக்கான தண்டனை விபரங்கள் ஏப்ரல் 25ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரெட்ஹில் பகுதியை சேர்ந்த 49 வயது ஆசாத் பாட்டி (Asad Bhatti) என்பவரே குடியிருப்புக்குள் வெடிகுண்டு தயாரித்த வழக்கில் கையும் களவுமாக சிக்கியவர்.
பிரித்தானியாவில் பொருளாதார ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ள ஆசாத் பாட்டி, தமது மடிக் கணினி பழுதானதை அடுத்து 2020 டிசம்பர் மாதம் பழுது நீக்கும் கடை ஒன்றில் அதை ஒப்படைத்துள்ளார்.
ஆனால் அந்த கடை உரிமையாளர், பாதுகாப்பு கருதி அந்த மடிக்கணினியில் உள்ள தரவுகளை பிரதி எடுத்த போது, அதில் வெடிகுண்டு தயாரிக்கும் முறை உள்ளிட்ட தரவுகள் இருந்துள்ளது.
இதில் அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். பொலிசார் உடனடியாக பாட்டியின் கணினியில் இருந்த தரவுகளின் பிரதி ஒன்றை சொந்தமாக்கியதுடன், கண்காணிப்பு கமெரா பதிவுகளையும் சேகரித்துள்ளனர்.
சோதனையில் 173 பக்கத்திற்கு வெடிகுண்டு தயாரிக்கும் தரவுகளும், ஜிகாத் தொடர்பான தகவல்களும் அதில் இருந்துள்ளன. மேலும், பாட்டியின் குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு ஆர்வம் காரணமாக
அவரது குடியிருப்பில் வெடிகுண்டு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களும் அவர் சேமித்து வைத்திருந்துள்ளார். ஆனால், அவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு சேகரிக்கப்பட்டதாக பாட்டி அதிகாரிகளிடம் வாதிட்டுள்ளார்.
@getty
மேலும் ஒரு ஆர்வம் காரணமாகவே அந்த பொருட்களை சேகரித்ததாகவும், வெடிகுண்டு தயாரிக்க முயற்சித்ததாகவும் பாட்டி விளக்கமளித்துள்ளார். மட்டுமின்றி, தன்மீதான குற்றச்சாட்டுகளில் இரண்டு பிரிவுகளை அவர் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் பாட்டி தொடர்பான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை விபரங்கள் ஏப்ரல் 25ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.