சச்சினின் 15 வருட சாதனையை முறியடித்த சூர்யா குமார் யாதவ் - T20 போட்டியில் புதிய மைல்கல்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யா குமார் யாதவ் 3 சாதனைகளை படைத்துள்ளார்.
முதலிடம் சென்ற பஞ்சாப்
ஐபிஎல் தொடரின் 69 வது லீக் போட்டி, நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யா குமார் யாதவ் 39 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடர்ந்து, 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 187 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் சார்பில் ஜோஷ் இங்லிஸ்(73) மற்றும் பிரியன்ஷ் ஆர்யா(62) அரைசதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வந்து, Qualifier 1 க்கு செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது.
சச்சின் சாதனை முறியடிப்பு
இந்த போட்டியில் சூர்யா குமார் யாதவ் 57 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில், 640 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம், மும்பை அணிக்காக ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை, சூர்யா குமார் யாதவ் முறியடித்துள்ளார்.
2010 ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் 5 அரைசதங்களுடன் 618 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
முன்னதாக, 2023 ஐபிஎல் தொடரில் 606 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதன் மூலம், மும்பை அணிக்காக 2 முறை 600+ ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை சூர்யா குமார் யாதவ் படைத்துள்ளார்.
அதிக 25+ ஓட்டங்கள்
மேலும், T20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக 25+ ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த தொடரில், சூர்யா குமார் யாதவ் விளையாடிய 14 போட்டிகளிலும் குறைந்தபட்சம் 25 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
முன்னதாக டெம்பா பவுமா 13 போட்டிகளில் தொடர்ச்சியாக 25+ ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |