டி20 உலகக்கிண்ணம்: இந்தியா 77க்கு 6 விக்கெட்..அழுத்தத்தை உணர்ந்தேன் - கேப்டன் சூர்யகுமார்
இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது அழுத்தத்தை உணர்ந்ததாக அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
விக்கெட்டுகள் சரிவு
இந்தியா, அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி வான்கடே மைதானத்தில் நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி களமிறங்க அபிஷேக் ஷர்மா முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.
அதன் பின்னர் இஷான் கிஷன் 20 ஓட்டங்களிலும், திலக் வர்மா 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஷிவம் தூபேவும் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த ரிங்கு சிங் (6), ஹர்திக் பாண்டியா (5) ஆகியோரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற இந்திய அணி 77 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என தடுமாறியது.

எனினும் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் நின்று ஆடி, ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 84 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 10 பவுண்டரிகள்) விளாசினார்.

இதன்மூலம் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. ஷாட்லே வான் ஸ்சால்விக் 4 விக்கெட்டுகளும், ஹர்மீத் சிங் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்தியா வெற்றி
பின்னர் ஆடிய அமெரிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.

அதிகபட்சமாக சஞ்சய் 37 ஓட்டங்களும், ஷுபம் 37 ஓட்டங்களும் எடுத்தனர். சிராஜ் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெற்றி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், "நாங்கள் 6 விக்கெட்டுகளுக்கு 77 ஓட்டங்கள் எடுத்திருந்த அந்த நிலையில், நான் எவ்வளவு அழுத்தத்தை உணர்ந்தேன் என்பதை என்னால் மட்டும்தான் சொல்ல முடியும்.
ஆனால் அதே நேரத்தில் இது போன்ற சூழ்நிலைகளில் நான் துடுப்பாட்டம் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் கடைசி வரை துடுப்பாட்டம் செய்தால், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எனக்குத் தெரியும்" என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |