வெறித்தனமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா! நியூசிலாந்தை நாசம் செய்த இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவின் சதம், தீபக் ஹூடாவின் அதிரடியான 4 விக்கெட்டுகள் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியை அபாரமாக வெற்றியடையச் செய்த்து.
இந்திய அணி முன்னிலை
மவுண்ட் மாவுங்குனியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இப்போட்டியில், சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். இதன் மூலம் நடப்பாண்டில் அவர் தனது 2-வது சதத்தை விளாசி இருக்கிறார்.
நாணய சுழற்சியில் வென்ற வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்கம்
இதனை அடுத்து இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 36 ஓட்டங்கள் சேர்த்தார். ஆனால், அவருடன் களமிறங்கிய ரிஷப் பண்ட் 13 பந்துகளை எதிர்கொண்டு, 6 ஓட்டங்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
அதையடுத்து, சூர்யகுமார் யாதவின் சிக்சர் மழை பொழிய தொடங்கியது. மறுமுனையில், ஸ்ரேயாஸ் ஐயர் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த்து ஆரம்பித்தார், ஆனால், 9 பந்துகளை எதிர் கொண்டு 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், பேக் ஃபுட்டில் நின்று ஷாட் அடிக்க முயன்ற போது ஹிட் விக்கெட் ஆனார்.
வெளுத்து வாங்கிய சூரியக்குமார் யாதவ்
]Twitter/@ESPNcricinfo
எனினும் மறுமுனையில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய சூரியக்குமார் யாதவ் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 7 இமாலய சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். நடப்பாண்டில் சூரியகுமார் யாதவ் விளாசிய இரண்டாவது சதம் இதுவாகும்.
கடைசி ஓவரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டிம் சௌதி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
அதனைத் தொடர்ந்து, 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. எனினும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலேயே கட்டுக்கோப்பாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர்.
இதில் பெபியன் ஆலன் டக் அவுட்டாகி வெளியேற, கான்வே 25 ஓட்டங்களும், பிலிப்ஸ் 12 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
தீபக் ஹூடா 4 விக்கெட்டுகள்
இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணி வீரர்களுக்கு நெருக்கடி அளித்தார். வில்லியம்சன் மட்டும் பொறுமையாக விளையாடி 52 பந்துகளில் 61 ஓட்டங்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், நியூசிலாந்து அணி 126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இந்திய அணியில், தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.