குஜராத் அணியின் கதையை முடித்த இளம் வீரர் சூரியவன்சி...15.5 ஓவரில் ராஜஸ்தான் சரவெடி
இளம் வீரர் வைபவ் சூரியவன்சியின் மிட்டலான ஆட்டத்தால் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அதிரடி வெற்றியை ராஜஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.
சுப்மன் கில் அதிரடி
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனை அடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், கில் ஆகியோர் களம் இறங்கினர்.
சாய் சுதர்சனிடம் இருந்த ஆரஞ்சு நிறத் தொப்பியை சூரியகுமார் மற்றும் விராட் கோலி ஆகியோர் கைப்பற்றிய நிலையில் தற்போது மீண்டும் சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தில் 39 ஓட்டங்கள் சேர்த்து ஆரஞ்சு நிற தொப்பியை தன் வசப்படுத்தினார்.
மறுபுறம் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்க்க 29 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 93 ஓட்டங்கள் சேர்த்தது. கில் தொடர்ந்து அதிரடியாக ஆட ஜாஸ் பட்லர் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார்.
கில் 50 பந்துகளில் 84 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். கடைசி வரை அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர் 26 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் மூன்று பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கும்.
இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில் 14 வயதேயான சூரியவன்ஷி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து குஜராத் அணியின் பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்தனர்.
சூரியவன்சி ருத்ரதாண்டவம்
சூரியவன்சி தன்னுடைய ருத்ரதாண்டவத்தை இன்று ஆடினார். முஹம்மது சிராஜ், இஷாந்த் ஷர்மா, பிரசித் கிருஷ்ணா, ரசீத்கான், வாஷிங்டன் சுந்தர் போன்ற சர்வதேச பந்துவீச்சாளர்களைக் கொண்ட குஜராத் அணியை சூரியவன்சி பதம் பார்த்தார்.
தொடர்ந்து அவர் சிக்ஸர், பவுண்டரி என அடிக்க குஜராத் அணி செய்வது அறியாமல் திகைத்துப் போய் நின்றது. அவர் 17 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைக்க, இதில் மூன்று பவுண்டரிகளும், ஆறு சிக்சர்களும் அடங்கும்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அரை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சூரியவன்சி படைத்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் ஜெய்ஸ்வால் கடந்த 2023 ஆம் ஆண்டு அரை சதம் அடித்தது தற்போது வரை சாதனையாக தொடர்கிறது.
தொடர்ந்து ஆக்கோரஷமாக ஆடிய அவர், ஒரே ஓவரில் 30 ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் 35 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிவேக சதம் இதுவாகும். டி20 வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
வெறும் 38 பந்துகளில் 101 ஓட்டங்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரியும், 11 சிக்சர்கள் அடங்கும். இறுதியில் ரியான் பராக் 15 பந்தில் 32 ஓட்டங்கள் எடுக்க, ஜெய்ஸ்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 70 ஓட்டங்களுடன் இருந்தார்.
இதனால் 15.5 ஓவரில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இன்று ராஜஸ்தான் 3வது வெற்றியை பதிவு செய்ததுடன், புள்ளி பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |