சுவிட்சர்லாந்தில் முகம் தெரியாத நபர் ஒருவருக்கு போலி கொரோனா சான்றிதழை விற்ற நால்வர்: பின்னர் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்
ஜெனீவாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் நான்கு பேர், போலி கொரோனா சான்றிதழ்களை விற்றுவந்துள்ளார்கள்.
சமீபத்தில், அவர்கள் முன்பின் தெரியாத ஒருவருக்கு போலி கொரோனா சான்றிதழ்களை விற்க முயன்றுள்ளனர். ஆனால், அந்த நபர் ஒரு பொலிசார்.
சாதாரண நபர் போல் தன்னைக் காட்டிக்கொண்டு அந்த போலி கொரோனா சான்றிதழ் விற்கும் கும்பலைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்த பொலிசார் ஒருவரிடமே அவர்கள் போலி கொரோனா சான்றிதழை விற்க முயன்றபோது, அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
சான்றிதழ் ஒன்றிற்கு 400 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் வைத்து, சுமார் 200 போலி சான்றிதழ்கள் வரை அவர்கள் விற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
சென்ற வாரம் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக மேலும் இரண்டு மாதங்களுக்கு அவர்களை காவலிலேயே வைத்திருக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளார்கள்.
இந்நிலையில், அவர்கள் பணியாற்றிவந்த மருத்துவமனைக்கும், இந்த போலி சான்றிதழ் விற்பனைக்கும் தொடர்பில்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.