சுவிட்சர்லாந்து நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் தற்கொலை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
சுவிட்சர்லாந்தில், சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்கப்படுவதால், இந்த கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் நீதிமன்றங்கள் எஞ்சிய நாடுகளை விட, குறிப்பாக அண்டை நாடுகளான ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலியை விட சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை அடிக்கடி தடுப்புக்காவல் அல்லது காவலில் வைக்க உத்தரவிடுகின்றன.
தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ள போதிலும் நீதிமன்றங்கள் இதே நடவடிக்கையை தொடர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், சுவிஸ் சிறைகளில் 60% தற்கொலைகள் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் நிகழ்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த ஐரோப்பியாவில் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் ஏற்படும் தற்கொலைகள் சராசரியாக் 37.5% என தெரியவருகிறது.
நீதிமன்றன்களின் இந்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்திற்கு இலக்கானாலும், தடுப்புக்காவல் நடவடிக்கை தொடர்வதாகவே ஆய்வில் குறிப்பிடுகின்றனர்.
மேலும், சந்தேகத்திற்கு இடமான குற்றவாளிகள் தப்பிச் செல்வதிலிருந்தும், அச்சுறுத்தலாக மாறுவதிலிருந்தும் அல்லது குற்றவியல் விசாரணைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதிலிருந்தும் தடுக்கவே அவர்களைத் தடுப்புக்காவலில் வைப்பதாக சட்டத்துறை விளக்கமளித்துள்ளது.
ஆயினும்கூட, சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் நிரபராதிகளாகக் கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.