சிறையில் இருந்து தப்பிய பிரித்தானிய ராணுவ வீரர்: விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
பிரித்தானியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் சிறையில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் தப்பியுள்ள நிலையில், விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர தேடுதல் நடவடிக்கை
தெற்கு லண்டனில் அமைந்துள்ள HMP Wandsworth சிறையில் இருந்தே முன்னாள் ராணுவ வீரரான 21 வயது டேனியல் அபேத் காலிஃப் தப்பியுள்ளார். இதனையடுத்து பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Image: Metropolitan Police
சிறையில் இருந்து, சமையலறைக்குள் நுழைந்த அந்த நபர், அங்கிருந்து திரைப்பட பாணியில் ஒரு டெலிவரி வேனின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சமையல்காரர்கள் பயன்படுத்தும் உடையில் கடைசியாக அவர் காணப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. டேனியல் அபேத் காலிஃப் தப்பியுள்ள நிலையில், அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை மூடப்பட்டுள்ளது.
Credit: Dan Charity
பயங்கரவாத குற்றங்களுக்காக
இந்த நிலையில் லண்டன் பொலிசார் நாடு முழுவதும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், எல்லைகள் மற்றும் துறைமுகங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலிஃப் இராணுவப் பின்னணியைக் கொண்டவர் மட்டுமின்றி முன்னர் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். மேலும், தற்போது அவர் பயங்கரவாத குற்றங்களுக்காக விசாரணைக்காக காத்திருக்கிறார்.
காலிஃப் கிங்ஸ்டன் பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவர் இன்னும் லண்டனில் ஒளிந்திருக்கவே வாய்ப்புள்ளதாக பொலிசார் நம்புகின்றனர். இருப்பினும் அவர் முக்கிய விமான நிலையங்களில் பயணம் செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அவர் ஆபத்தானவர் என கருதப்படுவதால், பொதுமக்கள் அவரை எதிர்கொள்ள நேரிட்டால், அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |