9 ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம்... அறிமுக போட்டியிலேயே அசத்திய இங்கிலாந்து வீரர் இடைநீக்கம்
லார்ட்ஸ் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றி அசத்திய இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் ஒல்லி ராபின்சன் இடைநீக்கம்.
குறித்த தகவலை ஜூன் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அவர் இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 வருடங்களுக்கு முன்பு சில டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார்.
இதனை தற்போது வெளிக்கொண்டு வந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த டுவீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது.
இந்த நிலையில் இஸ்லாமியர்கள் மற்றும் ஆசிய நாட்டவர்கள் மீது இனரீதியான கருத்துகளை ஒல்லி ராபின்சன் டுவிட்டரில் பதிவிட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மட்டுமின்றி, அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.