இரவில் வியர்வை அதிகமாக வருகிறதா? அப்போ இதான் பிரச்சனை... உடனே கவனிங்க
இரவில் தூங்கும்போது அறைக்குள் போதிய காற்றோட்ட வசதி இல்லாவிட்டாலோ, போர்வையால் நன்றாக மூடி இருந்தாலோ உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது தவிர்க்கமுடியாதது.
ஆனால் சிலர் நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் எழும்போது அணிந்திருக்கும் ஆடையெல்லாம் நனைந்து வியர்வை மழையில் குளித்துவிடுவார்கள். அதிக வேலை அல்லது உடல் சோர்வு காரணமாக எப்போதாவது இப்படி நேர்ந்தால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரவில் வியர்வையில் குளித்துக்கொண்டிருந்தால் அதன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளது.
தைராய்டு
உடலில் அதிகப்படியான வியர்வை மற்றும் அதிக வெப்பத்தை உணர்வது ஹைப்பர் தைராய்டிசத்தின் முக்கிய அறிகுறிகளாகும். தைராய்டு சுரப்பிதான் உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அது அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யத்தொடங்கும்போது வழக்கத்திற்கு மாறாகவோ, அசாதாரணமாகவோ உடல் இயக்க செயல்பாடு நடைபெறும். வழக்கத்துக்கு மாறாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதுபோல் பசியும், தாகமும் எடுக்கும். இதய துடிப்பும் வேகமெடுக்கும். கைகள் நடுங்கத்தொடங்கும். அதிக வியர்வையுடன் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்பதை உணரலாம்.
இரத்த சர்க்கரை
குறைவு நீரிழிவு நோயாளியாக இருந்தால் இரவு வியர்வைக்கும் அதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம். சிலருக்கு தூங்க செல்லும்போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு சரியாக இருக்கும். ஆனால் தூங்கியதும் குளுக்கோஸ் அளவு திடீரென்று குறைந்து போய்விடும். பகலில் அதிக வேலை பார்த்தாலோ, மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்தாலோ, இரவில் தாமதமாக சாப்பிட்டாலோ இந்த பிரச்சினை எழலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் பயன்படுத்தும் பட்சத்தில் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் காரணமாக இருக்கலாம்.
மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்தித்தல்
இரவில் சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் எழுந்தால் ‘சிலீப் அப்னியா’ எனும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். அதாவது உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. இதன் காரணமாக அதிகமாக வியர்க்க தொடங்கும்.
மார்பு வலி
இரவில் கடுமையான மார்பு வலி பிரச்சினை எழுந்தால் அதுவும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். உடலை நிமிர்த்த முடியாது. இது ‘ஆசிட் ரிப்ளக்ஸ்’ எனப்படும். இதன் காரணமாக இரவில் வியர்வை அதிகமாக வெளிப்படும். இத்தகைய பிரச்சினை இருந்தால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குறைவாக சாப்பிடுவது நல்லது. மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், தக்காளி கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இந்த பிரச்சினை எழுந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது, இல்லையேல் உயிரிழப்பை கூட சந்திக்க நேரிடும்.
புற்றுநோய்
பலருக்கு இரவில் வியர்வை வர புற்றுநோயே அதீத காரணமாக மருத்துவர்களால் சொல்ல படுகிறது.அதிலும் குறிப்பாக, தோல் புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,எலும்பு புற்றுநோய், மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றாலையே இரவில் வியர்வை வெளி படுகிறது. மேலும் கட்டிகள்,காய்ச்சல் இருந்தாலும் வியர்வை சில சமயங்களில் இரவில் வரலாம் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த மாதிரி சமயத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக நன்று.