சுவிஸில் இளம் பெண் உட்பட இருவரை தீவிரமாக தேடும் பொலிசார்
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாநிலத்தில் இளம் பெண் உட்பட இருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
துர்காவ் மாநிலத்தில் ரைன் நதியில் சனிக்கிழமை சுமார் 6.45 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இருவர் மாயமானதாக தெரிய வந்துள்ளது. இதில் 23 வயது பெண் ஒருவருடன் 28 வயது ஆண் ஒருவரையும் தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் தட்டையான படகு ஒன்றில் நால்வர் பயணித்துள்ளதாகவும், அவர்களின் நோக்கம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதில் இருவருக்கு சிக்கல் ஏற்பட்டதாகவும், அவர்கள் இருவரும் நீருக்குள் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து துர்காவ் கடற் பொலிசாரும் மீட்புக்குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் நள்ளிரவுக்கு பிறகு தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை துர்காவ் பொலிசார் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தகவல் தரக்கூடிய சாட்சிகளை பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.