சுவிட்சர்லாந்தில் பேசுபொருளாகிவரும் புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்தல் எதிர்ப்பை மையமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை ஒன்று பெருமளவில் பேசுபொருளாகிவருகிறது.
புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
பேசுபொருளாகிவரும் பிரேரணை
இந்நிலையில், சுவிஸ் நாடாளுமன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் பல்வேறு அமைப்பினர் அந்த பிரேரணை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துவருகிறார்கள்.
பிரேரணை தொடர்பில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான செய்தி ஒன்றை வெளியிட்ட சுவிஸ் உள்துறை அமைச்சரான எலிசபெத் (Elisabeth Baume-Schneider), வெளிநாட்டுப் பணியாளர்கள் சுவிஸ் நிதி அமைப்புக்கு வலு சேர்ப்பதாகவும், சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கு அவர்கள் பெரும் பங்களிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர், தாங்கள் பெற்றுக்கொள்வதைவிட சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கு கூடுதலாக பங்களிப்புச் செய்வதாகவும், அவர்களால் ஓய்வூதிய திட்டத்துக்கு உபரி நிதி கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார் எலிசபெத்.
சமீபத்தில், பிரெஞ்சு மொழி பேசும் மேற்கு சுவிஸ் மாகாணங்கள் இணைந்து நடத்திய மாநாடு ஒன்றில், அந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அந்த பிரேரணை, மக்கள்தொகை பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தாது என்று கூறியுள்ள ஜெனீவா மாகாண அரசின் தலைவரான Nathalie Fontanet, மாறாக, அது புதிய பிரச்சினைகளைத்தான் உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள No to 10 Million Switzerland பிரேரணை, மாகாண இறையாண்மையையும் தேசிய ஒருமைப்பட்டையும் மீறுவதாகவும் மாநாட்டில் பங்கேற்ற மாகாண பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும், சமீபத்திய ஆய்வு முடிவுகள், புலம்பெயர்தல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதால், சுவிட்சர்லாந்தில் வயதாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்தல், பிறப்பு வீதம் குறைதல் ஆகிய காரணங்கள் இணைந்து, கடும் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மருத்துவத்துறை, கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறை ஆகியவை இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் எச்சரிக்கின்றன.
இந்நிலையில், அந்த பிரேரணை மீது தற்போது மற்றொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதால், நாட்டில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதனால், தற்போது பணியாற்றிவருவோர் கூடுதலாக இன்னும் சில ஆண்டுகள் பணி செய்யவேண்டியிருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், பணியாளர் பற்றாக்குறையால், ஏற்கனவே பணியிலிருப்போர் ஓய்வு பெறும் வயது மேலும் சில ஆண்டுகள், அதாவது, 67 அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கப்படலாம் என எச்சரிக்கிறார்கள் பிரேரணையை எதிர்ப்போர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |