சுவிட்சர்லாந்தை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று வாழும் 788,000 சுவிஸ் நாட்டவர்கள்: ஒரு ஆச்சரிய தகவல்
உலகில் ஏராளமானோர் சுவிஸ் கனவுகளுடன் இருக்கும் நிலையில், 788,000 சுவிஸ் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று வாழ்கிறார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு செய்திதானே!
எத்தனையோ பேர் ஓய்வு காலத்தையாவது சுவிட்சர்லாந்தில் சென்று செலவிடமாட்டோமா என்றும், எப்படியாவது சுவிஸ் குடியுரிமை கிடைத்துவிடாதா என்றும் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்துக்கு வருபவர்களைவிட, சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது 2021இல்...
ஆம், 2021ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்துக்கு வந்த வெளிநாட்டவர்கள் 22,300 பேர். சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியவர்களோ, 28,700 பேர். ஆக, சுவிட்சர்லாந்துக்கு வந்தவர்களைவிட சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியவர்கள் 6,431 பேர் அதிகம்!
சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறுபவர்கள் எந்த நாட்டுக்குச் செல்கிறார்கள்?
சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியவர்களில் ஐரோப்பாவில் வாழ்பவர்கள் 501,600 பேர். அவர்களில் பிரான்சில் 203,900 பேரும், ஜேர்மனியில் 96,600 பேரும், இத்தாலியில் 50,500 பேரும், பிரித்தானியாவில் 38,900 பேரும், ஸ்பெயினில் 25,100 பேரும் வாழ்ந்துவருகிறார்கள்.
அதுபோக, ஐரோப்பாவுக்கு வெளியே வாழ்பவர்களில் 81,800 பேர் அமெரிக்காவிலும், 40,800 பேர் கனடாவிலும், 25,800 பேர் அவுஸ்திரேலியாவிலும், 22,100 பேர் இஸ்ரேலிலும் வாழ்கிறார்கள்.
ஆக, இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்னும் பழமொழி உண்மைதான் போலிருக்கிறது!