தனிமைப்படுத்தல் நாட்களை குறைத்துக்கொள்வது எப்படி?: சுவிட்சர்லாந்து ஆலோசனை
தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறைப்பதற்கான வழிமுறையை அறிவித்துள்ளது சுவிட்சர்லாந்து.
திங்கட்கிழமையன்று சுவிஸ் பெடரல் கவுன்சில் எடுத்துள்ள ஒரு முடிவின்படி, வெளிநாடு சென்று திரும்பியவர்களோ அல்லது கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்தவர்களோ, கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் சோதனை முடிவை சமர்ப்பித்தால், அவர்கள் 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு பதிலாக, ஏழாவது நாளே தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேற அனுமதிக்கும்படி கோரலாம்.
இதனால் தனிமைப்படுத்தல் காலம் முன்பிருந்ததைவிட கொஞ்சம் குறையும்.
இந்த விதிகள், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பொருந்தும்.
நீங்கள் சுவிஸ் குடிமகனாக இருந்து, வெளிநாடு சென்றுவிட்டு சுவிட்சர்லாந்துக்கு திரும்பினால், உங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று பொது சுகாதார அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த விதிகள் மாகாணத்துக்கு மாகாணம் மாறும் என்பதால், அந்தந்த மாகாணத்தின் விதிமுறைகளை கவனத்தில் கொள்வது நல்லது.